Advertisement

இலங்கையின் தமிழ்த் தேசத்திற்காக உருவாகும் மற்றொரு வரலாறு

இலங்கையின் தமிழர் குடிசார்  அமைப்புக்கள் பிரதான தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. பாக்கியசெல்வம் .அரியநேத்திரனை அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 8 அன்று மூத்த அரசியல்வாதியும் வழக்கறிஞருமான என் ஸ்ரீகாந்தாவினால் பகிரங்கப்படுத்தப்பட்டது. தமிழீழ தேசத் தந்தையும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஸ்தாபகருமான, காலஞ்சென்ற எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி. அவர்களின் நினைவாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடமான தந்தை செல்வா நினைவு மண்டபத்தில் இதற்கான சம்பிரதாய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
2004 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான யுத்த காலங்களிலும், அதன் பின்பு  2010 முதல் 2015 வரையான காலப்பகுதியிலும் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தியவர் திரு.அரியநேத்திரன்.

இலங்கைத் தீவு 1948 ஆம் ஆண்டு பிரித்தானியர்களால்  முறையற்ற குடியேற்ற நீக்கம் (Improper Decolonization) செய்யப்பட்ட பின்னர், இலங்கைத் தமிழர்கள் திட்டமிட்ட இனப்படுகொலை மற்றும் கட்டமைக்கப்பட்ட பாகுபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
மறைந்த எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தலைமையில் 1950 – 1970 களுக்கு இடையில் சிங்கள மேலாதிக்க அரசாங்கங்களுடனான நடைபெற்ற பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளும் பலனின்றிப் போயின.
இரண்டு வெவ்வேறு பிரதமர்களுடன் தமிழர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகக் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகள் சிங்கள தீவிரவாதிகள் மற்றும் பௌத்த பிக்குகளின் அழுத்தத்தின் காரணமாகக் கிழிக்கப்பட்டன அது மட்டுமன்றி தமிழ்த் தலைவர்களின் அமைதிவழிப் போராட்டங்களும் பொலிசாரின் அடக்குமறையை எதிர்கொண்டன.

தமிழர்களுக்கு எதிரான தொடர்ச்சியான பாரபட்சமான கொள்கைகள், எழுபதுகளின் ஆரம்பத்தில் தமிழர்களின் புரட்சிகளைத்  தோற்றுவித்து சிங்கள ஆதிக்க அரசாங்கங்களுடனான முழு அளவிலான போராக பரிணமித்ததுடன் மே 18, 2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழ் இனப்படுகொலை உச்சத்தை எட்டியதுடன் போரும் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டது. போரை முடிவுக்குக் கொண்டு வந்த இலங்கையின் ஜனாதிபதி மஹிந்திரா பெர்சிவல் ராஜபக்ச, போருக்குப் பிறகு தமிழர்களுக்கு நீதி வழங்கத் தவறியதோடு, பாரபட்சமான கொள்கைகளை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தார்.

தொடர்ந்து பதவியேற்ற சிங்கள அரசாங்கங்களும் சீனாவின் உதவியோடு, இந்தியாவுடனும் அமெரிக்காவுடனும் பூனையும் சுண்டெலியும் விளையாடிவாறு தமிழர்களை  புறக்கணிப்பதை இன்னும் வேகமாகத் தொடர்கின்றன. சிங்கள அரசாங்கங்களின் தொடர்ச்சியான பாரபட்சமான தமிழர் விரோதக் கொள்கைகள் காரணமாக, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களால், தாயத்திலுள்ள  தமது உறவினர்களுக்கு வழங்கப்படக்கூடிய  பொருளாதார மற்றும் அறிவியல் வளங்களும் பெருமளவில் மறுக்கப்படுகிறது.

தொடர்ச்சியான புறக்கணிப்பு, மற்றும் ஐ.நா. பொறிமுறைகளுடனான தொடர்பாடல், ஆகியனவற்றில் ஏற்பட்டுள்ள சலிப்பின் காரணமாக, இலங்கைத் தமிழர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் தமிழர்களுக்கான பொது வேட்பாளர், என்ற கருத்து உருவாகி ஆகஸ்ட் 8ம் திகதி வேட்பாளர் பெயரும் அறிவிக்கப்பட்டது. திரு. அரியநேத்திரனின் வேட்புமனுவை தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தும் என்று களத்திலும் புலம்பெயர் தமிழர்களும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருந்தனர். திரு.அரியநேத்திரனின் தேர்தல் சின்னமாக சங்கு உறுதி செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதன் மூலம் ஆறு நாள் காத்திருப்பு இன்று முடிவுக்கு வந்தது.

அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, இலங்கைத் தமிழர்கள், மீண்டும், சுயநிர்ணய உரிமைக்கான அவர்களின் வேணவாவில் மற்றொரு வரலாற்று அத்தியாயத்தை எழுதத் தயாராகியுள்ளனர். திரு. அரியநேத்திரனின் தோ்தல் களமிறக்கம், தமிழர் தேசத்திற்காக உருவாகிவரும் மற்றொரு வரலாறு ஆகும்.

தமிழ் பொது வேட்பாளர் பெறும் வாக்குகள், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மலையக மாகாணங்களின் சில பகுதிகளிலும் வாழும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாகத் தங்களைத் தாங்களே ஆளும் ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தமது ஒன்றிணைந்த நிலைப்பாட்டினை, சிங்கள ஆட்சியாளர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஒரு தெளிவான செய்தியாக அனுப்பும்.   
தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவான அலை புலம்பெயர் தேசங்களிலும், களத்திலும் மேலெழும்ப ஆரம்பித்துள்ளது. இலங்கைத் தமிழர்கள் 1977 ஜூலை 21 அன்று செய்தது போல் மீண்டும் செப்டம்பர் 21 தேர்தலில் தங்கள் ஒருமித்த நிலைப்பாட்டைக் காட்டத் தயாராகி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *