Advertisement

தமிழ் மக்கள் வழிகாட்டுவார்கள்

நன்றி:   நிலாந்தன்

Ariyanenthiran Candidate half article 04“யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” இவ்வாறு 1931 ஆம் ஆண்டு எழுதியவர் பிலிப் குணவர்த்தன.இப்பொழுது பிரதமராக உள்ள தினேஷ் குணவர்த்தனவின் தகப்பன் அவர்.

ஒரு இடதுசாாரியாக இருந்தவர்.1931ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் முதலாவது தேர்தல் நடந்த பொழுது யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய,யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் தேர்தலை பரிஷ்கரிக்குமாறு மக்களைக் கேட்டது.காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகிய யாழ்ப்பாணம் வாலிப காங்கிரஸ் இலங்கை தீவுக்கு முழு சுயாட்சி வேண்டும் என்று கேட்டு அத் தேர்தலைப் புறக்கணித்தது.

Ariyanenthiran Candidate half article 05அப்புறக்கணிப்பை தென்னிலங்கையில் உள்ள இடதுசாரிகள் பெருமளவுக்கு ஆதரித்தார்கள்.அவ்வாறு ஆதரித்த இடதுசாரிகளில் ஒருவராகிய பிலிப் குணவர்தன அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அப்புறக்கணிப்பை தென்னிலங்கையில் உள்ள இடதுசாரிகள் பெருமளவுக்கு ஆதரித்தார்கள்.அவ்வாறு ஆதரித்த இடதுசாரிகளில் ஒருவராகிய பிலிப் குணவர்தன அது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்பொழுது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இக்குறிப்பு யாழ்ப்பாணம் யுத் காங்கிரசைப்பற்றி கலாநிதி சீலன் கதிர்காமர் எழுதிய நூலில் காணப்படுகின்றது.ஆனால் யாழ்ப்பாணம் வாலிப காங்கிரசை பின்பற்றி தேர்தல் புறக்கணிப்பை ஆதரித்த தென்னிலங்கை இடதுசாரிகள் கடைசி நேரத்தில் குத்துக்கரணம் அடித்து தேர்தலில் பங்குபற்றினார்கள் என்பது வேறு கதை.

யாழ்.வாலிப காங்கிரசின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் பெருமளவுக்கு வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் ஓரளவுக்கு வாக்களிப்பு நடந்தது. வாலிபக் காங்கிரஸ் அவ்வாறு தேர்தலை புறக்கணித்தது சரியா பிழையா என்ற விவாதத்தில் இப்பொழுது இறங்கத் தேவையில்லை.ஆனால் கடந்த நூற்றாண்டில் இலங்கைத் தீவின் முதலாவது தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு இயங்கிய ஒரு இளைஞர் அமைப்பு “ப்ரோ ஆக்டிவாக”-செயல் முனைப்பாக ஒரு முடிவை எடுத்துப் புறக்கணித்தது என்பதுதான் இங்கு முக்கியமானது. காலனித்துவ அரசாங்கம் நடாத்திய முதலாவது தேர்தலை தமிழ்த் தரப்பு எவ்வாறு செயல்முனைப்போடு அணுகியது என்பதற்கு அது ஒரு எடுத்துக்காட்டு.

அங்கிருந்து தொடங்கி கடந்த சுமார் 83 ஆண்டுகால இடைவெளிக்குள் தமிழ்த் தரப்பு அவ்வாறு தேர்தல்களை செயல்முனைப்போடு கையாண்ட மேலும் ஒரு சந்தர்ப்பம் எதுவென்றால்,அது 2005ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலாகும்.

அப்பொழுது வன்னியில் ஒரு கருநிலை அரசை நிர்வகித்த விடுதலைப்புலிகள் இயக்கம் அந் தேர்தலை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுத்தது. அவ்வாறு தேர்தலை புறக்கணிப்பதன் மூலம் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைக்கக்கூடிய வாக்குகளை தடுப்பதே அந்த பகிஷ்கரிப்பின் நோக்கமாகும்.ஏனென்றால் அப்பொழுது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தது. அந்த அரசாங்கம் நோர்வையின் அனுசரணையோடு ஒரு சமாதான முயற்சியை முன்னெடுத்து வந்தது. சமாதான முயற்சியை விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தருமர் பொறியாகவே பார்த்தது. எனவே அதில் இருந்து வெளிவருவதற்கு ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டும் என்று அந்த இயக்கம் சிந்தித்தது. அதன் விளைவாக தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழ் மக்களுக்கு கோரிக்கை விடுத்தது.

தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டிருந்திருந்தால் அவர்கள் தனக்கே வாக்களித்திருந்திருப்பார்கள் என்று ரணில் விக்ரமசிங்க இப்பொழுதும் நம்புகின்றார்.தன்னுடைய வெற்றியைத் தடுத்து மஹிந்த ராஜபக்சவை ஆட்சிக்கு ஏற்றியதன்மூலம் விடுதலைப் புலிகள் இயக்கம் சமாதானத்தை முறிக்க விரும்பியது என்றும் அவர் நம்புகிறார்.

அத்தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கம் அதாவது தமிழ்த் தரப்பு எடுத்த முடிவானது முன்பு யாழ்ப்பான வாலிப காங்கிரஸ் எடுத்த முடிவு போலவே செயல்முனைப்பானது.தேர்தலை தமிழ்நோக்கு நிலையில் இருந்து தந்திரோபாயமாக அணுகுவது.

அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் தமிழ் அரசியலின் மீது மட்டும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. அதற்குமப்பால் தென்னிலங்கை அரசியல், இந்த பிராந்திய அரசியல் என்று பல்வேறு பரிமாணங்களில் அந்த பகிஷ்கரிப்பின் விளைவுகள் அமைந்தன. அவற்றின் தொடர்ச்சிதான் இப்பொழுதுள்ள அரசியலும்.

இவ்வாறு தென்னிலங்கையில் இருந்து அறிவிக்கப்படும் ஒரு தேர்தலை செயல்முனைப்போடு அணுகும் மூன்றாவது முயற்சிதான் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவம் ஆகும்.

கடந்த 83 ஆண்டுகளிலும் மீண்டும் ஒரு தடவை தமிழ்த் தரப்பு ஒரு தேர்தலை நிர்ணயகரமான விதங்களில் எதிர்கொள்ளும் ஒரு முடிவு இது. முன்னைய இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ்த் தரப்பு தேர்தலைப் புறக்கணித்தது. ஆனால் இம்முறை தமிழ்த் தரப்பு தேர்தலில் பங்குபற்றுகின்றது. அதன்மூலம் தமிழ் மக்களை ஒன்று திரட்ட முயற்சிக்கின்றது. தமிழ் மக்களை ஒரு திரண்ட அரசியல் ஆக்க சக்தியாக மாற்றுவதன்மூலம் தமிழ் மக்களுடைய பேரபலத்தை அதிகப்படுத்தி, இனப்பிரச்சினை தொடர்பான மேடைகளில் தமிழ் மக்களை ஒரு திரண்ட சக்தியாக நிறுத்துவது தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற கருத்துருவத்தின் முதல் நிலை நோக்கமாகும்.தமிழ் மக்களை அகப்பெரிய திரட்சியாக மாற்றினால் அது பேச்சுவார்த்தை மேசையிலும், நீதி கோரும் மேடைகளிலும் தமிழ்மக்களை பலமான சக்தியாக மாற்றும்.அந்த அடிப்படையில்தான் ஒரு பொது வேட்பாளர் நிறுத்தப்படுகின்றார்.

அந்த முடிவு தென்னிலங்கை வேட்பாளர்களின் மீது எவ்வாறான தாக்கத்தை செலுத்தியுள்ளது என்பதற்கு ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தரப்பைப் பேச அழைத்ததில் இருந்து விளங்கிக் கொள்ளலாம்.

ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் பகுதிகளிலும் ஒரு பகுதி அரசியல்வாதிகளும் விமர்சகர்களும் கடுமையாக எதிர்ப்பைக் காட்டி வருகிறார்கள்.தென்னிலங்கையில் யாரெல்லாம் தமிழ் வாக்குகளை கவர விரும்புகிறார்களோ அவர்கள் அனைவரும் பொது வேட்பாளரைக் கண்டு பதட்டமடைகிறார்கள்.

அவர்களுடைய தமிழ் முகவர்கள் எஜமானர்களை விட அதிகமாக பதறுகிறார்கள்.தமிழ் வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் திருப்தியூட்டும் வெற்றிகளைப் பெறத் தவறி விடுவார்கள் என்று அவர்களுக்கு பதட்டம்.ஆனால் தமது தென்னிலங்கை எஜமானர்கள் தமிழ் மக்களுக்கு எதைத் தருவார்கள் என்பதனை அவர்களால் இன்று வரை தெளிவாகக் கூற முடியவில்லை.

கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டதுபோல,அவர்களில் யாருமே சமஸ்டியைத் தரப்போவதில்லை.அப்படி என்றால்,அவர்கள் தரக்கூடிய சமஸ்டிக்கு குறைவான வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அதாவது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு வாக்குறுதிகளை தந்து விட்டு அவற்றை மீறிய,அல்லது உடன்படிக்கைகளை எழுதி விட்டு அவற்றை தாமாக முறித்துக் கொண்ட ஒரு தரப்பு இப்பொழுதும் வாக்குறுதியைத் தரும் என்று காத்திருப்பதை எப்படிப் பார்ப்பது? அவர்கள் வரலாற்றில் இருந்து எதையுமே கற்றுக் கொள்ளவில்லை. தத்துவஞானி ஹெகல் கூறுவது போல “வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவென்றால், மனிதர்கள் வரலாற்றிலிருந்து எதையுமே கற்றுக் கொள்வதில்லை என்பதைத்தான்.” இவ்வாறு வரலாற்றுக் குருடர்களாக இருக்கும் அரசியல்வாதிகள் பொது வேட்பாளரை நிறுத்தும் தரப்பைப் பார்த்து முட்டாள்கள் என்கிறார்கள்.அது ஒரு கேலிக்கூத்து என்கிறார்கள்.அது ஒரு விஷப்பரீட்சை என்கிறார்கள்.

ஆனால் அவ்வாறு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்க்கும் யாருமே இதுவரையிலும் எந்த தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் எதற்காக ஆதரிக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறவில்லை.இது ஒரு முக்கியமான விடயம். தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொன்னால் தென்னிலங்கையில் உள்ள எந்த வேட்பாளர் சரி என்பதை அவர்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். ஆனால் தமிழ்ப் பொது வேட்பாளர் பிழை என்று சொல்பவர்கள் யாருமே இதுவரையிலும் எந்தத் தென்னிலங்கை வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்று தெளிவான முடிவை மக்களுக்கு கூறவில்லை.

ஏன் கூறவில்லை ? ஏனென்றால் தென் இலங்கையில் உள்ள எந்த ஒரு கட்சியும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆகக் குறைந்தபட்ச வாக்குறுதியைக்கூட தருவதற்குத் தயாராக இல்லை. இப்பொழுது தராத வாக்குறுதியை அவர்கள் பிற கெப்பொழுதும் தரப்போவதில்லை.

எனவே இந்த இடத்தில் தமிழ் மக்கள் தெளிவாக செயல்முனைப்போடு இரண்டு முடிவுகளில் ஒன்றைத்தான் எடுக்கலாம்.ஒன்று பகிஸ்கரிப்பது அல்லது தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பது. தமிழ்ப் பொது வேட்பாளருக்குள் பாகிஸ்கரிப்பும் உண்டு.அதாவது தென்னிலங்கையில் உள்ள எந்த ஒரு வேட்பாளரையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால்தான் தமிழ் வேட்பாளர் முன்னிறுத்தப்படுகிறார்.

கடந்த 84 ஆண்டுகளுக்குள் தமிழ் மக்கள் எடுத்த நிர்ணயகரமான ஒரு முடிவாக அதை மாற்ற வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும். 83 ஆண்டுகளுக்கு முன் பிலிப் குணவர்த்தன “யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது” என்று சொன்னார்.இப்பொழுது கிழக்கிலிருந்து ஒரு பொது வேட்பாளர் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இம்முறை வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழர் தாயகம் பொது வேட்பாளரை முன்னிறுத்துகின்றது.தமிழ்ப் பொது வேட்பாளர் அதிகரித்த வாக்குகளைத் திரட்டினால் அது தென்னிலங்கைக்கும் வெளியுலகத்துக்கும் தெளிவான கூர்மையான செய்திகளைக் கொடுக்கும்.தமிழ் ஐக்கியத்தை மேலும் பலப்படுத்தும்.எனவே இப்பொழுது தமிழ்மக்கள் முன்னாள் உள்ள தெரிவு இரண்டுதான்.ஒன்று,தென்னிலங்கை வேட்பாளர்களுக்காக காத்திருந்து மேலும் சிதறிப் போவது.இன்னொன்று தமிழ்ப்பொது வேட்பாளரை பலப்படுத்துவதன்மூலம் முழு இலங்கைக்கும் வழிகாட்டுவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *